சென்னை வந்தடைந்த பிரதமரை வரவேற்ற அமைச்சர்கள்!

சென்னைக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள், துரைமுருகன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகையொட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.