சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2012ம் ஆண்டு வருமானதுறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், மோகன்லால் வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான யானை தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்ததற்காக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பெரும்பாவூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், யானை தந்தம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்லால் வரும் நவம்பர் 3ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார். அதேபோல், வழக்கைத் திரும்ப பெறக்கோரி மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். எனவே, வரும் நவம்பர் 3ம் தேதி மோகனால் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது யானை தந்தம் வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.