பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் கடைகளுக்கு எந்த டார்க்கெட்டையும் வைக்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம், “புயலின் காரணமாக காஞ்சிபுரம், சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகளவில் பெய்த போது முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டுவரப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான் மழை நீர் சாலையில் தேங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளதாகவும் 636 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதன் மூலம் 27 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை யொட்டி மதுபான விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. டாஸ்மாக்கில் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இல்லை. மது குடிப்பவர்கள் வேறு எங்கும் போகக்கூடாது என்பதை மட்டும் கண்காணித்து வருகிறோம். இதேபோல், டெட்ரா பாக்கெட் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.