டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் வெற்றிபெற்றால் தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்குக்கு முக்கிய பதவி தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார். எலான் மஸ்க் ‘சேவை செய்ய தயாராக இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார்.
வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இப்போதிலிருந்தே கடுமையான போட்டி நிலவுகிறது. இப்போட்டிக்கு நடுவே, உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்ந்து ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அரசின் ஆலோசகராக எலான் மஸ்க்கை நியமிப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் “சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பதிவின் கீழ், “அரசாங்கத்திறன் துறை” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேடையின் முன் எலான் மஸ்க் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.