டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: மீண்டும் நேர்முகத்தேர்வு!

Filed under: தமிழகம் |

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பிரிவில் நேர்காணல் முடிந்த பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் இருப்பதால் அந்த இடத்தை நிரப்ப இறுதி கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி செய்திக்குறிப்பில், “குருப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளில் உள்ள 161 காலியிடங்களுக்கு 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நேர்காணல் பதவிகளில் உள்ள இடங்களை முழுவதுமாக நிரப்ப கடைசி கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ள தேர்வர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட தேர்வர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இதுகுறித்து அந்த தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். அவர்கள் ஒருமுறை பதிவு வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். நேர்காணல் பதவிகளுக்கான இந்த இறுதி நேர்முகத்தேர்வு நடத்தப்பட்ட பிறகு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்” என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.