தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,700 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. 4000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700 க்கு மேல் எண்ணிக்கை வர மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் மளமளவென எண்ணிக்கை உயர்ந்து வந்தது. இதையடுத்து கடைசி மூன்று தினங்களாக மட்டும் எண்ணிக்கை 400 முதல் 500 வரை இருந்தது. இது பாதிப்பு குறைந்துள்ளதாக மக்கள் மனதில் எண்ணத்தை எழுப்ப எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எண்ணிக்கயைக் குறைத்துக் காட்டுவதற்காக சோதனைகளை குறைத்துள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். இது மக்களுக்கும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு நேற்று பதிலளித்துள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘தமிழகத்தில் இதுவரை 3,37,841 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.39 அரசு ஆய்வகங்கள் உட்பட 61 ஆய்வகங்கள் தமிழகத்தில் உள்ளன. 24 மணி நேரமும், அரசின் ஒட்டு மொத்த இயந்திரமும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளன.
சோதனைக் குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறானது. வெளியூர்களிலிருந்து வருபவர்களைப் பொறுத்து, அன்றைய நிலவரப்படி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை அதிகமாகும். ஒரு நாள் குறையும். கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்ட சோதனை எண்ணிக்கை சராசரியாக 12, 536 ஆக இருக்கிறது. ’ எனக் கூறியுள்ளார்.