தமிழகத்தில் அக்டோபர் 10ம் தேதி நான்காம் கட்ட தடுப்பூசி முகாம்

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 29:

தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை நடந்துள்ள மூன்று கட்ட தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 70 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 4.50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், அக்டோபர் 10ம் தேதி நடைபெறும். அதற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து, 14.10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் வாயிலாக நேற்று சென்னை வந்தது. இந்த தடுப்பூசிகளை பெற்ற சுகாதார அதிகாரிகள், அவற்றை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்”
என தெரிவித்தார்.