இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு பரபரப்புகள், விவாதங்கள் நடந்து வந்த சூழலில் இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்தே விட்டார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய் 3 பக்கத்திற்கு நீளமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். அதில் தனது நோக்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் வரும் சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சி செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் தற்போது கட்சி தொடங்கியுள்ள நிலையில் தான் ஒப்புக்கொண்டுள்ள படங்களை கட்சிக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், அதுவே தமிழக மக்களுக்கு தான் செய்யும் நன்றிக்கடன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இதனால் வெங்கட் பிரபு இயக்கும் க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திற்கு பிறகு விஜய் நடிக்க உள்ள படம் அவரது கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் விஜய்யின் இந்த அறிக்கை பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு தூய அரசியல்வாதி வரமாட்டாரா? என ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு விஜய் வந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது, விஜய் தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்த ஒரு சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் குறிப்பாக எக்ஸ் இணையதளத்தில் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான ட்விட்டுக்கள் இதுகுறித்து பதிவாகி வருகிறது. மொத்தத்தில் விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் மாஸ் காட்டி வருகிறார்கள்.