உதயநிதி மற்றும் வடிவேலு நடித்துள்ள “மாமன்னன்” திரைப்படத்தை வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பு நிறுவனத்தினால் அதிருப்தியடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“மாமன்னன்” திரைப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் ஜூன் மாதம் 29ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் மாமன்னன் படக்குழுவினரால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை திரையிட படக்குழுவினர் அதிக தொகையை பங்காக கேட்பதுதான் காரணமாம். வழக்கமாக திரையிடப்படும் படங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளருக்கு 60 சதவீதமும் திரையரங்க உரிமையாளருக்கு 40 சதவீதமும் கொடுக்கப்படுமாம். ஆனால் “மாமன்னன்” திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தரப்பில் 70 சதவீதம் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது.