மதிமுக திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், நிர்வாக குழு கூட்டம் நாளை சென்னையில் நாளை நடைபெறுகிறது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதற்காக குழுவை தி.மு.க அமைத்திருக்கிறது. இதில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் இடங்களை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நிலவி வருகிறது. கடந்த முறை தரப்பட்டதுபோல் ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை மற்றும் சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் திமுகவுடன் மதிமுக நடத்திய மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. மதிமுக நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பது குறித்தும், அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.