திருச்சியில் இன்று பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம் : தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ள ஸ்டாலின்!
திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்கப் பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். பொதுக்கூட்டத்திற்காக, 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் பேர் வரை அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியேற்றி வைக்கவுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாகர்கோவிலுக்கு வருகை தருகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து, காலை பத்து மணிக்கு ஹெலிகாப்டரில் நாகர்கோவிலில் உள்ள ஏ.ஆர்.கேம்ப் தளத்தை அடைகிறார் அமித் ஷா, மீனாட்சிபுரம் சந்திப்பிலிருந்து வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெறும் கொடி பேரணியில் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், 2 மணிக்கு மீண்டும் ஏ.ஆர்.கேம்ப் தளத்துக்குச் செல்லும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்படுகிறார்.
கிருஷ்ணகிரியை அடுத்த சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதாக மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்தார். முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியின் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.