திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்!

Filed under: இந்தியா |

ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்க அனுமதி அளித்துள்ளார்.

திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன. மக்கள் அதிக அளவில் வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எரிபொருள் செலவு மற்றுமின்றி சுற்றுசூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே மலை பாதையில் மின்சார பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஒலெக்ர்டா நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பஸ் இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 36 இருக்கைகள், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை இந்த பஸ் இயக்க முடியும்‌.