தேசிய கட்சிகளை சீண்டாத மாநில மக்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

DSC_0079பாராளுமன்றத் தேர்தல் இந்திய கட்சிகளை கலங்க வைத்துள்ளது. இந்திய பொருளாதார சீர்கேடு, இந்திய உற்பத்திதிறன் குறைவு போன்ற காரணங்கள் இந்திய பொருளாதார நிபுணர்களை கலங்க வைத்துள்ளது. எதைத்தின்றால் பொருளாதார பித்தம் தெளியும் என்ற சூழ்நிலை இன்று உலவுகிறது.
அடுத்த ஆட்சி கட்டிலில் அமரப்போகும் கட்சி டெல்லி ஆம் ஆத்மி கட்சிபோல பிசுபிசுத்துப்போகும் நிலை ஏற்படலாம் என்ற கணிப்பு உள்ளது. இந்தியாவை வலிமை ஆக்க இந்திய அதிகாரிகள் தயாரித்த நல்ல திட்டங்கள் அடிமையாகிவிட்ட அரசியல் வாதிகளால் கிடப்பில் போடப்பட்டு இந்தியாவை பல சமயங்களில் உலகில் தலைகுனிய வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்தேறின என்ற குற்றச்சாட்டு உலவுகிறது.
நரேந்திரமோடியை முன்னிறுத்தி செயல்பட்ட பா.ஜ.க. தற்போது தளர ஆரம்பித்துள்ளது. காரணம் மாநில கட்சிகளின் எழுச்சி, மாநில மக்களின் உணர்வுகள் எழுச்சி பெற்றிருப்பது என்ற கருத்து உலவுகிறது. மதவாதத்தையும் மதச்சார்பற்றத்தன்மையையும் முன்வைத்து குளிர் காயந்த தேசிய கட்சிகள், தற்போது மாநில மக்களின் உணர்வுகளை மதிக்க மறந்து விட்டார்களாம். ஆந்திரம், உத்திரபிரதேசம், மகாராஷ்ட்டிரம் போன்ற மாநிலங்கள் இருதேசிய கட்சிகளுக்கும் பெருத்த தலைவலியை கொடுக்கக்கூடியவை என்கிறார்கள். கேரளா மதச்சார்பற்ற தன்மை போர்வையில் மதவாத ஆட்சி நடத்துவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் மாநில மக்களின் உணர்வுகளை தேவையற்ற நிலையில் தட்டி எழுப்பி தெலுங்கானாவை உருவாக்கி காங்கிரசும், பா.ஜ.க.வும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
பீகாரில் சிறப்பு நிதி கேட்டு போராடும் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தரமறுக்கும் இரு தேசிய கட்சிகள், மாநில உணர்வுகளை மதிக்க தவறிவிட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக தமிழகத்தில் இருதேசிய கட்சிகளும் குழப்பும் காட்சிகள் தமிழக மக்களை மொத்தத்தில் கடுப்பேற்றி உள்ளது. உச்சநீதி மன்றம் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மத்திய அரசுடன் கலந்தோசித்து விடுதலை செய்யலாம் என்ற உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட காலம்வரை தண்டனை அனுபவித்த குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற விதியில், தற்போது இருதேசிய கட்சிகளும் விளையாடிக் கொண்டிருப்பதாக தமிழகத்தில் கூறப்படுகிறது. தெளிவான கொள்கைகளை அதாவது தமிழர்களின் உயர்வுக்கு உத்திரவாதம் கொடுக்கும் செயல்களை கொடுக்க மறுக்கிறார்கள். இரு தேசியகட்சிகளும் தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதில் முனைப்பு காட்டுகிறார்களாம். ஆனால் தேசிய அளவில் தமிழர்களை மதிக்கும் கொள்கைகளை வெளியிட தயங்குகிறார்கள் என்பது சுட்டெரிக்கும் உண்மை.
உண்மையில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இலங்கை பிரச்னைக்கு தீர்வுகாண விரும்புகிறார்கள். இலங்கை பிரதமர் அடக்கப்படவேண்டும் அல்லது இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள். நெற்றிக்கண் போன்ற தமிழ் பத்திரிகையாளர்கள் இந்திய மக்களிடம் பேசும்போது வெளிப்படும் மன உணர்வுகள் அதிகம். அனைத்து இந்திய மக்களின் ஒருமித்த குரல் தமிழக முதல்வர் பிரதமராகி, இந்திய பிரச்னைகளை தீர்ப்பதுதான் என்பது சுட்டெரிக்கும் உண்மை. வெளிநாடுகளில் பிறந்து இந்தியாவை ஆளுகின்ற அரசியல்வாதிகள், இந்திய பண்புகளையும், இந்திய மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள்.
தமிழக முதல்வரின் பல அதிரடி நடவடிக்கைகள் வடமாநில மக்களையும், அரசியல்வாதிகளையும் கவர்ந்து உள்ளது. பல அதிகாரிகள் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வர் பற்றி கேட்கும்போது அவர்களுடைய ஆர்வம் வெளிப்படுகிறது. மொத்தத்தில் 40 தொகுதிகளும் தமிழக முதல்வருக்கு வெற்றிக்கனியாக கொடுத்து, பச்சை தமிழச்சி பிரதமர் அரியணையில் ஏற தமிழகம் முன்வருமா? என்ற சிந்தனை இந்திய மக்களிடம் மேலோங்கி உள்ளது.