ஜனவரி 19ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 29ம் தேதி அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, “தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படும். நடிகர் சங்கத்தில் சவால்களை எதிர்கொள்ளும் போது விஜயகாந்தை நினைத்துக் கொள்வோம். அனைவருக்கும் அன்னமிட்டத்துடன் அன்பை வாரி வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இல்லை” என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.