கரூர்: நாடக நடிகர்களுக்கு நிலம் தருவதாக விஷால் கூறுகிறார். அதை அவர் உடனே கொடுத்தால், நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று நடிகர் விஷாலுக்கு நடிகர் ராதாரவி சவால் விட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகின்ற 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிடுகிறார்கள்.
சரத்குமார் அணியை சேர்ந்த ராதாரவி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்திப்பதற்காக கரூர் வந்திருந்தனர். அங்கு நடைபெற்ற இந்த அணியினரின் ஆலோசனை கூட்டத்தில் ராதாரவி பேசும்போது, ”நடிகர் சங்க தேர்தல் என்றால் பொதுவாக ஒருவரையொருவர் கைகுலுக்கிக் கொண்டு அவரவருக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு அளித்துவிட்டுபோய் விடுவார்கள்.
ஆனால், இந்த தேர்தலில் விஷால் தங்கள் அணிக்கு, ‘பாண்டவர் அணி’ என்று பெயர் வைத்து போர்க்களம் போல் சித்தரித்து இருக்கிறார். அப்படியானால், நாங்கள் (சரத்குமார் அணியினர்) என்ன கவுரவர்களா? விஷால் சரித்திரம் தெரியாமல் பேசுகிறார். நாடக நடிகர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று விஷால் தரக்குறைவாக எடைப்போடுகிறார். அதற்கு நாடக நடிகர்கள் இடம் கொடுக்கக்கூடாது. நாடக நடிகர்களுக்கு சரத்குமார் அணி என்றுமே ஆதரவாக இருக்கும்” என்றார்.
இந்த கூட்டத்திற்கு பின் ராதாரவி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தென்னிந்திய நடிகர் சங்கத்தை நாடக நடிகர்கள் இல்லாத சங்கமாக மாற்ற விஷால் முயற்சிக்கிறார். நாடக நடிகர்களுக்கு நிலம் தருவதாக விஷால் கூறுகிறார். நாடக நடிகர்களுக்கு அவர் உடனே நிலம் கொடுத்தால், நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என்று சவால்விட்டுள்ளார்.