அமைச்சர் அன்பில் மகேஷ் “நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரினை நடிகர் விஜய் நேற்று அறிவித்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, “விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் உதயநிதியை அடுத்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் அவர், “நடிகர் விஜய்யை பொருத்தவரை உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன், நேரடியாக அன்பொழுக பேசக்கூடியவர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல் நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கொள்கைகள் என்று வரும்போது தான் அவருடைய கட்சியின் நோக்கம் தெரியவரும்” என்று தெரிவித்தார்.