நடிகை குஷ்பு பாஜகவிலிருந்து நடிகை கவுதமி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என்று வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகியது குறித்து நடிகை குஷ்பு “எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவிலிருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர். அவரது எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். “கவுதமி விலகியது மன வேதனையை அளிக்கிறது” என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.