நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு அவரது சிறுவயதில் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
90களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவியும் ஆவார். அரசியலில் இணைந்த குஷ்பூ இதற்கு முன்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கருத்து வேறுபாட்டால் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்து செயலாற்றி வந்தார். தற்போது குஷ்பூவிற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அவர் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர் “ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அந்த தாக்கம் அந்த குழந்தையை வாழ்க்கை முழுவதும் அச்சமூட்டிக் கொண்டே இருக்கும். என் தந்தை என் அம்மாவை அடிப்பார். நான் என்னுடைய 8 வயதில் என் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவருக்கு எதிராக பேச எனக்கு எனது 15 வயதில்தான் தைரியம் வந்தது. ஆனால் இதையெல்லாம் என் அம்மா நம்புவாரா என்ற சந்தேகமும் இருந்தது. ஏனென்றால் எது நடந்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்ற மனநிலையில் என் அம்மா இருந்தார். ஆனால் நான் என் தந்தைக்கு எதிராக போராடினேன். எனக்கு 16 வயது ஆகும்போது அவர் எங்களை விட்டு சென்று விட்டார். அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார். குஷ்பூவின் வெளிப்படையான இத்தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு நேர்ந்த தொல்லைகளை தாண்டி அவர் இவ்வளவு தூரம் சாதித்துள்ளதை பலரும் பாராட்டியுள்ளனர்.