பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணிய னுக்கும் இம்மாதம் 23-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. இவ்வருட இறுதியில் அவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா ‘கில்லி’ ‘திருப்பாச்சி’, ‘கிரீடம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘சாமி’, ‘மங்காத்தா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜீத்துக்கு ஜோடியாக ‘என்னை அறிந்தால்’ படத்திலும், ஜெயம் ரவியுடன் ‘அப்பா டக்கர்’ படத்திலும் நடித்துவருகிறார்.
த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்ததாக முதலில் கிசுகிசுக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அந்தக் காதல் முறிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் த்ரிஷாவுக்கும் தொழிலதிபரும் சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த நவம்பர் மாதம் த்ரிஷா, வருண் மணியன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானது. அதே நேரத்தில் அவர்களுக்கு திருமணம் நடத்திவைப்பது குறித்து இரு வீட்டாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி வருண் மணியன் – த்ரிஷா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்தத்தில் இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களின் திருமணம் இவ்வருட இறுதியில் நடை பெறவுள்ளதாக இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து 24-ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நெருங்கிய நண்பர்களுக்கு வருண் மணியன் விருந்தளிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து தான் சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாக வெளியான செய்திகளை த்ரிஷா மறுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “சினிமாவை விட்டு இப்போதைக்கு விலகும் திட்டம் இல்லை. நான் மேலும் 2 புதிய படங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளேன். இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் ரிலீஸாக உள்ளன. மேலும் திருமண தேதி இன்னும் நிச்சயிக்கப் படவில்லை” என்று கூறியுள்ளார்.