சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம் பெண்ணடம் காமராஜர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் பணியின் காரணமாக சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தில் ஏறி சி.கொத்தங்குடி தோப்பு செல்லும் வழியில் திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதறிப் போன மணிகண்டன் மற்றும் காமராஜ் இருவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போது தீ பரவத் தொடங்கியதால் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் மூலம் தீயை அனைத்தனர். இருப்பினும் காரில் இருந்து புகை அதிகமாக வந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதும் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கார் எப்படி தீப்பற்றி எரிந்தது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் வந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகியோர் காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாலையில் சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.