நாகை ஏப்ரல் 24
பி.மூர்த்தி (எ) சிற்பி
நாகை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவப்பிரகாசம் என்பவர், லஞ்சம் பெற்ற புகார் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவப்பிரகாசம். ஜெயங்கொண்டாம் ஊரை சேர்ந்த இவர், கஞ்சா, சாராயம் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இவர், இங்கு காவல் ஆய்வாளராக பணியை தொடங்கிய நாள் முதல், புகார் அளிப்பவர்களிடம் இருந்து, லஞ்சம் பெறாமல் நடவடிக்கை எடுக்க மாட்டாராம். எதிர் தரப்பினரிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களை பேருக்கு கண்டித்துவிட்டு அனுப்பிடுவாராம். எந்த ஒரு புகாருக்கும் இவர் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், மணல் லாரி கடத்துபவரிடம் லஞ்சம் பெற்று பல லட்சங்களை பெற்றுள்ளதாக, நாகை எஸ்.பி க்கு புகார் சென்றது. இதையடுத்து, சிவ பிரகாசத்திற்கு ஆயுத படைக்கு பணி செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதிலிருந்து தப்பிக்க, சிவப்பிரகாசம், நெஞ்சுவலி என மருத்துவமனையில் அட்மிட் ஆனார். புகார் மேல் அதிகாரிக்கு செல்ல, தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன், ஆய்வாளர் சிவ பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதற்கு முன்பு சீர்காழி காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா லஞ்சம் பெற்ற புகாரில் சஸ்பெண்ட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.