நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வியாபம், லலித் மோடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் மழைக்கால தொடரில் கடும் புயல் வீசும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மத்தியப் பிரதேசத்தை மையம் கொண்டுள்ள வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 49 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினையாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. லலித் மோடி விவகாரம் மேலும் ஐ.பி.எல். ஊழல் வழக் கில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில பொதுவிநி யோக திட்டத்தில் ரூ.36,000 கோடி அளவுக்கு நடைபெற்ற ஊழலில் முதல்வர் ரமண் சிங், அவரது மனைவி, உறவினர்கள் ஆதாயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மூன்று விவகாரங்களும் மழைக்கால தொடரில் இடியாக எதிரொலிக்கும் என்று தெரிகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா இவை தவிர நான்காவது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க உள்ளதால் அதுதொடர்பான மசோதா மழைக்கால தொடரில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிகிறது. பிரதமர் மோடி அழைப்பு ஊழல் விவகாரங்கள் தொடர் பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஓரணியில் திரண்டுள்ளதால் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அழைப்பு விடுத் துள்ளார். டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர் கள், எம்.பி.க்களுடன் அவர் முக் கிய ஆலோசனை நடத்த உள்ளார். அனைத்துக் கட்சி கூட்டம் இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்து வது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதை தொடர்ந்து இன்று பிற்பகலில் மக்களவை சபாநாய கர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்து கிறார். இந்த இரு கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் வியூகம் ஊழல் விவகாரங்களில் சிக்கி யுள்ள மத்தியப் பிரதேச முதல் வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ் தான் முதல்வர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பதவி விலக வேண்டும், இல்லை யெனில் நாடாளுமன்றம் முடங்கும் என்று காங்கிரஸ் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சித் தலைவர் சோனியா காந்தி முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தி அரசுக்கு எதிராக பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே மழைக்கால கூட்டத் தொடரில் பெரும் புயல் வீசக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.