மனிதநேயம் என்பது துளி இல்லாத நிலையில் சில கும்பல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிந்த வீடுகளுக்குள் புகுந்து பணம், நகை திருடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் திடீரென்று கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 3 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. தோண்டும் இடமெல்லாம் பிணங்களாக உள்ளது. தற்போது வரையிலும் பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. மேலும் 200 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பகாக நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தன்னார்வலர்கள் உதவிப் பொருட்களையும் கொண்டு வருகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட சோகமான சூழலிலும் இடிந்த வீடுகளுக்குள் புகுந்து திருடி வருகிறது சில கும்பல். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உயிர் பயத்தில் தங்கள் உடமைகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். வீடு புகுந்து பணம், நகைகளை சிலர் திருடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இரவு நேர காவல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தன்னார்வலர்களும் உரிய ஆவணங்களை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.