தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உட்பட தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவு தேர்வுகளில் முறைகேடுகள் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது குழுவுடன் சேர்ந்து தேர்வு நடத்தும் அதிகாரிகள், நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை செய்தால் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. மேலும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.