மாணவர் ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கை விரல்கள் துண்டானது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரபு – நதியா தம்பதி 15 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதின் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாகவேதான் இருக்கும். அவ்வகையில் ஜெயபிரபுவின் மகனும் அவரிடம் பணம் வாங்கி பட்டாசு வாங்கி அது வெடிக்கிறதா என சோதனை செய்வதற்காக ஒரு பட்டாசை வெடிக்க செய்த போது எதிர்பாரத விதமாக கையில் இருந்தவாரே பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது, இதில் சிறுவனின் வலது கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகி பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சூழலில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை சமயத்தில் மாணவர்கள் பலர் பட்டாசுகள் வெடிக்கும் போது கவனமாக கையாள வேண்டும் என பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.