அதிமுக கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில, தேசிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிக்காக தயாராகி வருகின்றன. ஆனால் இந்த பேச்சுக்கள் தொடங்கும் முன்னதாகவே முந்தைய நாடாளுமன்ற தேர்தல் முதலாக கூட்டணியிலிருந்து வந்த பாஜக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜகவின் தலைமையே எனவும் பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்த அதிமுக தன்னுடன் இணைந்துள்ள வேறு சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. எனினும் கூட்டணி விலகல் குறித்த அடிப்படையான காரணத்தை அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிசாமி பெரிதும் பேசாமலே இருந்து வந்தார். தற்போது அதற்கான காரணம் குறித்து பேசிய அவர் “தேசிய அளவிலான கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது நம்முடைய மாநிலங்களின் பிரச்சினைகளை சொன்னால் அவர்கள் காது கொடுத்துக் கூட கேட்பது இல்லை. அதனால் மாநிலத்தின் நலன் பாதிக்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவே கூட்டணியிலிருந்து விலகினோம்” என்று கூறியுள்ளார். முன்னதாக தமிழக பாஜக தலைமையுடனான மோதல்தான் காரணம் என பேசப்பட்டது. தற்போது மாநில உரிமைகளை மத்தியில் பேச முடியவில்லை என குற்றம் சாட்டும் தொனியில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.