கவுதமி தனிப்பட்ட முறையில் ஏமாந்ததற்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும் என திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, இந்த விவகாரத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது முரண். அந்த நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் எப்படி கட்சி தலையிட முடியும்? மேலும் சில மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி புரிவதாக சொல்வதும் முறையல்ல என எண்ணுகிறேன். அப்படி யாராவது உண்மைக்கு எதிராக துணை நிற்பதாக கௌதமி அவர்கள் நிரூபித்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுக்க தயார். உணர்ச்சி வசப்பட்டு கௌதமி கட்சியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவிலிருந்து பின் வாங்கினால் மகிழ்ச்சி. இல்லையேல் அது அவரின் தனிப்பட்ட தவறான முடிவு. கவுதமி நல்லவர். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டது கட்சியாலோ, கட்சியினராலோ அல்ல. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும். அவரின் பிரச்சனைகள் விரைவில் தீரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.