பாட்டாளிகள் நாள் – இராமதாஸ் வாழ்த்து!

Filed under: தமிழகம் |

உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து செய்தி.

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

பாட்டாளிகள் தான் இந்திய நாட்டின் முதுகெலும்பு ஆவர். அந்த முதுகெலும்புகள் இப்போது முறிந்து கிடக்கின்றன. கொரோனா வைரஸ் என்ற கொடிய கிருமி அனைத்தையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது.  உலகம் முழுவதும் உற்பத்தி, விற்பனை என பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களும் முடங்கி விட்ட நிலையில், பாட்டாளிகள் பட்டினியில் வாடுகின்றனர். சொந்த ஊரில் வாழ வழியின்றி வேலை தேடி வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தவர் இப்போது சென்ற இடத்திலும் வாடுவது தான் பெருஞ்சோகம்.

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். ஆகவே, கொரோனா வைரஸ் கிருமியை விரட்டியடித்து, தொழிலாளர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய பொருளாதார சுழற்சியை தொடங்கி வைப்போம். அத்துடன் கொரோனா பாதிப்பிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின்படி இனி எந்த பேரிடர் வந்தாலும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அவர்களின் வாழ்வாதார உரிமைகளை மீண்டும் ஒருமுறை மீட்டெடுப்போம்.

மத்திய அரசின் மூலமாகவும், மாநில அரசின் மூலமாகவும் பாட்டாளிகள் வர்க்கத்திற்கு செய்ய வேண்டிய பணிகளும், வழங்கப்பட வேண்டிய நியாயமான உரிமைகளும் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் வென்றெடுக்கும் பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று கூறிக் கொண்டு மீண்டும் ஒரு முறை  மே நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.