இந்திய மக்களின் தேர்தல் விழிப்புணர்ச்சிக்கு இந்திய பத்திரிகை உலகமே தலைசாய்த்து வணங்குகிறதாம். காரணம் இந்திய மக்களின் உணர்வுகளை அதிகார ஆணவத்தால் அலட்சியப்படுத்தி, அன்னிய உணர்வுகளை இந்திய நாட்டின் துரோகிகளுடன் இணைந்து திணிக்க முயன்ற அரசியல்வாதிகளை இந்திய அரசியல் வானிலிருந்து அடியோடு அழித்து விட்டார்கள். இந்திய மக்கள் மதசார்பற்ற போர்வையில் மதஉணர்வுகளை தீவிரமாக ஆதரித்த அரசியல் கட்சிகள் பலவும் இந்திய ஒற்றுமையில் நசுங்கி போயுள்ளன. இந்தியத்தாய் வெற்றி திலகமிட்டு மகிழ்ச்சியுடன் எழுந்துள்ளதாக போற்றுகிறார்கள்.
சுயநலம் படைத்த சில கேரள அரசியல்வாதிகள், கேரள அதிகாரிகள் துணைக்கொண்டு, ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸ் மைய அரசையும் ஒட்டுமொத்தமாக அழித்த பெருமை இந்திய மக்களை சேர்ந்தது. இளைய தலைமுறை என்ற பெயரில் இந்திய மக்களை முட்டாளாக்க நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளார்கள். 18 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பிக்க குறைந்தது 5 வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். பாரத கலாச்சார பண்புகளை ஒதுக்கி தள்ளிய காங்கிரஸ் கட்சி, தற்போது வெளிநாட்டில் வளர ஏற்பாடு செய்வது நல்லது என்று கிண்டலடிக்கிறார்களாம்.
ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், ஆந்திரம் ஆளுநர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள் என்ற கருத்து உலவுகிறது. கர்நாடகம், மகாராஷ்டிரம், இமாச்சலம், உத்தரகாண்ட் மாநிலங்கள் புதிய முதல்வர்களை எதிர்கொள்ளும் என்கிறார்கள். காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி இவர்களுடைய அதிகாரம் இனி காங்கிரசில் அதிகம் எடுபடாது என்ற கணிப்பும் உள்ளது.
பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும், காங்கிரசில் இருந்ததைபோல் நிதிக்கு, ஆசைப்பட்டு இந்தியாவை காட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகள் அக்கட்சியிலும் இருக்கிறார்கள் என்ற கருத்து வெளிப்படுகிறதாம். இவர்கள் ஒரு ஆண்டு அமைதியாக இருந்து, பிறகு தங்களது உள்குத்து வேலைகளை பா.ஜ.க.வில் கண்டிப்பாக தொடங்குவார்கள் என்ற அரசியல் கணிப்பு உலவுகிறது. வெற்றிகரமாக பணியாற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசை, சந்திரபாபு நாயுடுவை உசுப்பிவிட்டு கவிழ்த்த இந்த பா.ஜ.க. அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்கி தங்கள் நச்சுத்தன்மையை வெளிப்படுத்தலாம் என்ற கருத்து உலவுகிறது.
இந்த பாராளுமன்ற தேர்தலில் காணாமல் போன கட்சிகளாக இடதுசாரி, முலாயம்சிங் யாதவ், மாயாவதி கட்சிகளை தேசிய அளவில் கூறுகிறார்கள். பணம் ஒன்றையே குறிக்கோளாககொண்டு செயல்பட்ட இடதுசாரிகள் தற்போது திகைத்து நிற்கிறார்களாம். நாம் நெற்றிக்கண்ணில் முன்பே கூறியபடி உலக நாடுகள் எதிர்பார்த்த வெற்றி தமிழக முதல்வருடையது என்கிறார்கள். தமிழகத்தில் பூதக்கண்ணாடியில் தேடும் நிலையில் உள்ள பா.ஜ.க., மோடி அரசியல் பொம்மையை காட்டி பூச்சாண்டி காட்டியது. அதற்கு தமிழக நடிகர்களும் பில்டப் காட்டினார்கள். வானவில் கூட்டணி என்ற பெயரிட்டு குச்சி மிட்டாய் காட்டினார்கள். தமிழ் உணர்வுகளையும், தமிழர்களின் எழுச்சியையும் காங்கிரசுடன் இணைந்து மட்டப்படுத்திய பா.ஜ.க. தலைவர்கள், தமிழகத்தில் வெற்றி உறுதிமொழிகளை கூறினார்கள். பக்கத்தில் இருக்கும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை மறுத்த பா.ஜ.க. தென்னக நதிகளை இணைக்க உறுதி கூறியது. தமிழ் குலத்தை அழித்த இலங்கை அதிபருக்கு கைகொடுத்த தேசிய பா.ஜ.க. தமிழகத்தில் தமிழன் வாழ்வுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நாடகம் ஆடியது. பா.ஜ.க.விற்கு ஆதரவாக தமிழ் தமிழன் என்று அரிதாரம் பூசி வசனம் பேசிய கட்சிகள் தமிழர்களை முட்டாள்களாக்க துணிந்தன.
ஆனால் தமிழ் தாயின் தலைமகள், தமிழகத்தின் காவல் தெய்வம் புரட்சி தலைவிக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்து நின்று ஆதரவளித்தது. இனி தமிழ் என்றால் பொன்மனச் செல்விதான் என்ற தத்துவம் உண்மையாகிவிட்டது. இனி விஜயகாந்த் கட்சி உடைந்து எதிர்கட்சி பதவியை இழக்கலாம். தி.மு.க. கட்சி உடையக்கூடிய சாத்திய கூறுகள் உண்டு என்று தலை அசைக்கிறார்கள். வாசன் காங்கிரசிலிருந்து தனியாக பிரிந்து பழைய சைக்கிளை மறுபடியும் புதுப்பித்து, அ.தி.மு.க. தலைவிக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. வறட்டு கௌரவம் உடைய தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க.வுடன் இணைந்து முட்டுக்கட்டைபோடும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்கிறார்கள்.