கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அகில இந்திய காங்கிரசை குறிப்பிடுகிறார்கள். சொந்த செல்வாக்கை நந்தவனத்து ஆண்டிபோல் போட்டு உடைத்து வரவிருக்கும் ஆதரவையும் மொத்தமாக உடைத்தவராக ராகுல் காந்தியை குறிப்பிடுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டிலும், நிர்வாகத் திறமையின்மையிலும் சிக்கி காங்கிரசை அழிக்கிறார்கள். சிறந்த நிர்வாகத்திறமை, அரசியல் நிர்வாகம் தெரிந்தவர்கள், முதல்வராக சோனியாகாந்தியின் அடிவருடிகள் தடுத்து விடுகிறார்களாம்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி மறுபடி புத்துணர்ச்சி பெறுவது கடினம் என்ற கசப்பான உண்மை வெளியாகி உள்ளது. ராகுல் காந்தியைக் கண்டாலே காங்கிரஸ் தொண்டர்கள் அலறத்தொடங்கி விட்டனராம். இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பிரியங்கா காந்திதான் என்று அடித்துக் கூறுகிறார்கள். தெனாவட்டு, திமிர், ஆணவம், அகங்காரம், வறட்டு கௌரவம் அத்தனையும் மொத்தமாக கையாண்டு காங்கிரஸ் ஆலோசகர்கள் காங்கிரசை மண்ணைக்கவ்வ விட்டுள்ளனர். தற்போது மத்திய பிரதேச மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரின் கீழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தனியாக அமரும் நிகழ்வு வரவிருக்கும் குளிர்காலத் தொடருக்கு பிறகு ஏற்படும் என்ற கருத்து உலவுகிறது. பா.ஜ.க. கறைபடியாத திறமை உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு வலை விரித்துள்ளதாம்.
தமிழக ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் சிறந்த நண்பர் என்கிறார்கள். தன் மகனை பா.ஜ.க.வில் சேர்த்து உயர்ந்த இடத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று பா.ஜ.க. பாராளுமன்ற அலுவலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரையும் பா.ஜ.க.வில் இணைக்க திட்டம் இட்டுள்ளதாக கூறப்படுகிறது. ப.சிதம்பரம் தனித்து சுப்பிரமணிய சுவாமி போல் இயங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சுப்பரமணியசுவாமி இன்று இலங்கை, அதிபரின் முக்கிய ஆலோசகர் என்று இலங்கை அதிகார வட்டங்கள் கூறுகின்றன. இவரது கண்ணசைவில் இலங்கை தமிழர்களின் பிரச்னை அலசப்படுகிறதாம். இலங்கை அதிபரின் பல இலங்கை நிர்வாக நடவடிக்கைகளுக்கு தமிழக சுவாமி முக்கிய காரணம் என்ற வதந்திகள் உலவுகின்றன. தமிழக பா.ஜ.க. தமிழர் நலன் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கும் நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தமிழர்கள் பாதுகாப்பு பேரவையினர் எச்சரிக்கை செய்கிறார்களாம்.
ஜெயலலிதாவின் மயான அமைதி இந்திய அரசியல் வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல கோணங்களில் ஜெயலலிதாவின் மௌனத்தை அலசுகிறார்கள். முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் அமைச்சரவையில் பணிபுரிந்த மொராக்கா என்ற மத்திய அமைச்சரின் உதவியாளர், தற்போது ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகள் கூறுவதாக பாராளுமன்ற நடுவன் ஹாலில் கிசுகிசுக்கப்படுகிறது. பல உட்பிரிவுகளின் கீழ் பதிவாகி இருக்கும் சட்டத்தின் தடைகளை உடைக்க, கைதேர்ந்த கிரிமினல் வழக்கறிஞர்களின் தேவை ஜெயலலிதாவுக்கு காலத்தின் கட்டாயம். பல ஊகங்கள் நடைமுறைகளாக கருதப்பட்டு தீர்ப்பாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஜெயலலிதாவை காப்பாற்றக்கூடிய ஒரே நபர் ஜெயலலிதாதான். அவருடைய நிதானம், அறிவுக்கூர்மை, புரிந்துகொள்ளும் சக்தி, மற்றவர்களின் நம்பகத்தன்மை போன்றவற்றை தீர ஆராய்ந்து தடைகளை உடைக்கக்கூடிய நிலையில் உள்ளதாக டெல்லி பிரபல கிரிமினல் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.