பிரதமர் மோடி திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என கூறினார். அதற்கு திமுக எம்பி கனிமொழி திமுக அழியும் என சொன்ன பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி, தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது என்றும் திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பங்கேற்றிருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “திமுக அழியும் என சொன்ன பல பேர் காணாமல் போய்விட்டார்கள். நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்பதில்லை. தேர்தலுக்காக தமிழகத்திற்கு சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது என்று விமர்சித்துள்ளார். குலசேகரன் பட்டினத்தில் ஏவுதளம் கொண்டுவர திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குலசேகரபட்டினம் ஏவுதளம் திமுகவுக்கு கிடைத்த வெற்றி. புயல் வெள்ளத்திற்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. இதுவரை முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை” என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.