பள்ளி மாணவர்கள் கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் விசாரணையில் திருப்பங்கள் நடந்துள்ளது.
சமீப காலமாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்கிறார். சமீபத்தில் அவர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரை வரவேற்க ‘ரோடு ஷோ’ நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பலரும் சீருடையோடும், அனுமார் உள்ளிட்ட வேடங்கள் அணிந்தும் காத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கமளிக்க கோரி பள்ளிக்கல்வித்துறைக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வித்துறையினர், பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக மாணவர்கள் செல்லவில்லை என்றும், பிரதமர் ரோடு ஷோ நடக்கும் பகுதியில் பள்ளி இருந்ததால் பிரதமர் மோடி சென்றபோது மாணவர்கள் வெளியே வந்து பார்த்தனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரத சாஹூ தெரிவித்துள்ளார்.