பிரபல கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்களான சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவை மூடப்படப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளதால் 90ஸ் கிட்ஸ்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
90ஸ் கிட்ஸ் முதல் தற்போதைய குழந்தைகள் வரை பலருக்கும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை தந்தவை கார்ட்டூன் சேனல்கள். தற்போது நிக்லோடியன், ஹங்கமா உட்பட பல புதிய சேனல்கள் உள்ளன. ஆனால் 90களில் குழந்தைகளின் விருப்ப சேனலாக இருந்தவற்றில் முக்கியமானது கார்ட்டூன் நெட்வொர்க். 2000களுக்கு பிறகு தொடங்கப்பட்டிருந்தாலும் சுட்டி டிவியும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற கார்ட்டூன் சேனலாகும். சுட்டி டிவில் ஒளிபரப்பான ஜாக்கிசான், டோரா, பண்டலேரோ, ஹீ மேன் உள்ளிட்ட தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதுபோல கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, பென் 10, கரேஜ் தி காவர்ட்லி டாக், பாப்பாய், பவர்பப் கேர்ள்ஸ் போன்ற ஷோக்கள் இன்றும் 90ஸ் கிட்ஸ் இடையே பிரபலமாக உள்ளது. ஆனால் சமீப காலமாக குழந்தைகள் கார்ட்டூன் சேனல்கள் மீது காட்டும் ஆர்வம் குறைந்துவிட்டதாகவும், நிறைய சேனல்கள் வந்துவிட்டதால் ஒளிபரப்பை கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் நிறுத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த தகவல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கார்ட்டூன் நெட்வொர்க், “யார் சொன்னா நாங்கள் இறந்துவிட்டோம் என்று.. இப்போதுதான் 30வது ஆண்டில் நுழைகிறோம். எங்கள் ரசிகர்களுக்கு, நாங்கள் எங்கேயும் போகல. எப்போதும் உங்களுடன் உங்கள் வீட்டிலேயே உங்களுடைய பிடித்தமான கார்ட்டூன்களோடு இருந்து கொண்டேதான் இருக்கிறோம். மேலும் பல காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளது. அதுபோல சமீபமாக சுட்டி டிவியும் மூடப்போவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் ஏதுவும் இன்னும் வெளியாகவில்லை