ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி “நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம் கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம். எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் அவர், “நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோவை வர உள்ளார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஜனவரி 28ம் தேதி வரை பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணியை நாளை கோவை சூலூரில் துவங்க இருக்கிறார். அதிமுகவிற்காக இரண்டு மூன்று கொடிகள் வைத்துள்ளனர், இரட்டை இலை போட்ட கொடி ஒன்று, கட்சிப் பதிவின் போது எம்ஜிஆர் கொடுத்த கொடி ஒன்று, அண்ணா தொழிற்சங்க கொடி ஒன்று உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் பெயரை போட்டு உத்தரவு கூறப்பட்டுள்ளது. நானோ மற்றவர்களோ கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என்று கூறவில்லை. கொடியைத்தான் பயன்படுத்துவேன் எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம். கொடியைப் பயன்படுத்தியதற்காக சிறைக்குச் செல்லவும் தான் தயார். அண்ணா திமுக பேனரில் தான் பூத் கமிட்டி கூட்டம் நடக்கும், ஓபிஎஸ் தான் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு இருக்கிறதே தவிர புகழேந்தி பயன்படுத்தக் கூடாது என உத்தரவு இல்லை” எனவும் ஆவேசமாக கூறினார்.