புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி, ஏப்ரல் 25

மார்ச் 25 முதல் ஊரடங்கு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கல்வியாண்டின் இறுதி என்பதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கவில்லை. 10ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட முடியாமல் நின்று விட்டது.  இத்தகையச் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. புதுச்சேரி அரசு இந்தப் பிரச்சனையை கவனத்தில் கொண்டு அனைத்து பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பு அறுந்துவிடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் கல்வியை அறிமுகப்படுத்தியது.  கல்வி நிலையத்திற்குச் செல்லாமல் நீண்ட நாட்களுக்கு மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும்போது படிப்பின் மீது ஆர்வம் குறைந்து விடும்.  நமக்குத் தெரியும் என்ற அலட்சியமும் ஏற்பட்டு விடும்.  தேர்வு வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையில் புத்தகத்தை தொடவே மாட்டார்கள்.  இந்த மனோபாவத்தை மாற்றி இது விடுமுறைக் காலம் அல்ல படிக்க வேண்டிய காலம்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

பள்ளிக்கல்வி

புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் ஊரடங்கு அறிவித்த பிறகு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வகையில் தங்களது வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி உள்ளது.  9488201820 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் யார் வேண்டுமென்றாலும் சந்தேகங்களைக் கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.

                10ஆம் வகுப்புக்கு தேர்வு எப்பொழுது நடக்கும் என்ற நிச்சயமற்ற சூழலில் மாணவர்கள் பாடங்களை மீண்டும் ஒரு முறை திரும்பப் படித்துப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக மெய்நிகர் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.  இந்த அறையில் பாடம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் இங்கு வந்து பாடம் நடத்துவார்கள்.  மாலை 5 மணி முதல் 6 மணி வரை பாடம் நடத்துவதும் அதைத் தொடர்ந்து 1 மணி நேரம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும் நடைபெறுகிறது.  நேற்று (24-4-2020) மட்டும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கேட்ட 140 கேள்விகளுக்கு நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் விளக்கங்களை அளித்தனர். 

யூ-டியூபில் கல்வித்துறைக்கென ஒரு சேனல் தொடங்கப்பட்டு உள்ளது.  இதில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.  மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையின் காணொளி காட்சிகளும் இதில் பதிவேற்றப்படுகின்றன.  இந்தச் சேனலுக்கு இதுவரை 2,740 சந்தாதாரர்கள் உள்ளனர்.  யூ-டியூப் வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 63,142 ஆக அதிகரித்துள்ளது. 

மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் 10ஆம் வகுப்புக்குத் தமிழ்ப்பாடம் நடத்தும் ஆசிரியை எல்.ஷகிலா கூறியதாவது: இந்த ஆன்லைன் வகுப்பை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்கின்றனர்.  பாடம் எடுக்கின்ற எங்களுக்கு இது புது அனுபவமாகவும் இருக்கிறது.  ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிக்கூடத்திற்கும், வீட்டிற்கும் ஒரு பாலமாக இந்த ஆன்லைன் வகுப்பு உள்ளது.

தொழிற்கல்வி

பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்காகவும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.  புதுவை அரசின் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் கூகுள் மீட் என்ற வீடியோ கான்ஃபரன்ஸ் முறையின் மூலம் வகுப்புகள் நடத்துகின்றனர்.  புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் பேராசிரியர் க.நாகராஜன் கூறியதாவது: நாங்கள் ஒரு மாத காலமாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி வருகிறோம்.  மாணவர்கள் ஆர்வமுடன் இந்த வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.  வழக்கமான வகுப்பறை வகுப்பு போலவே நடைபெறும் இந்த வகுப்புகளில் பரஸ்பர இருவழி தொடர்பியலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் சி.உதயகுமார் கூறியதாவது: நாங்கள் மாணவிகளை இணைத்து வாட்ஸ்-அப் குழு ஆரம்பித்து உள்ளோம்.  இதன் மூலம் பாடங்களை அனுப்புகின்றோம்.  சந்தேகங்கள், கேள்விகள் இருக்கின்ற மாணவிகள் வாட்ஸ்-அப்லேயே கேள்விகள் கேட்கின்றனர்.  அவர்களுக்கு உரிய பதில்களும் அனுப்பப்படுகின்றன.  இதுமட்டுமல்லாமல் யூ-டியூப், கூகுள் மீட் போன்றவைகளையும் நாங்கள் பயன்படுத்துகின்றோம். சுமார் 50 சதவிகிதம் மாணவிகளிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற வசதிகள் இல்லாததால் அவர்களால் இந்த ஆன்லைன் வகுப்பின் பயனைப் பெற முடியாமல் போகிறது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரச்சனைகள், அனைத்துக்கும் மேலாக உயிர் பயம் ஆகியவற்றை மீறி மாணவர்கள் கற்பதில் ஆர்வம் காட்டுவதும் அரசு கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருவதும் வரவேற்கத்தக்க அம்சங்களாகும்.