புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

Filed under: அரசியல்,புதுச்சேரி |

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக இருந்த ஜான்குமார் எம்எல்ஏ, சாதகமற்ற சூழல் நிலவினால் காங்கிரஸிலிருந்து விலகுவேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இச்சூழலில் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் கோரியுள்ளார்.

திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த ஜான்குமார் பாஜகவுக்கு மாறப்போவதாகத் தகவல் வெளியானது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார். அப்போது, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் அவர் போட்டியிட தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜான்குமார்.

அதையடுத்து, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார்.

முதல்வருக்கு மிக நெருக்கமாக இருந்த ஜான்குமார், கருத்து வேறுபாட்டாலும், அமைச்சராக்க வேண்டும் உட்பட தனது கோரிக்கைகள் நிறைவேறாததாலும் தற்போது காங்கிரஸிலிருந்து வெளியேற உள்ளார்.

இதுபற்றி அவரிடம் பேசியதற்கு, “நான் ஏற்கெனவே பெங்களூருவில் 2 முறை பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவைச் சந்தித்துள்ளேன். தற்போதைய சந்திப்பு கட்சி ரீதியான சந்திப்பு இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தித்தேன். தற்போது வரை காங்கிரஸில்தான் நீடிக்கிறேன். காமராஜரையே தூக்கியெறிந்த கட்சி காங்கிரஸ். உண்மையில் நான் ஏமாற்றப்பட்டவன்.

எனக்குச் சாதகமற்ற சூழ்நிலை நிலவினால் 100 சதவீதம் காங்கிரஸை விட்டு விலகுவேன். என்னால் 5 எம்எல்ஏக்களை உருவாக்க முடியும். என்னுடைய தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியுமா என்ற கேள்வியைச் சவாலாகவே சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதுபற்றி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறுகையில், “வருமான வரித்துறை சோதனையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே ஜான்குமார் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பாஜக பொறுப்பாளர்களை ரகசியமாகச் சந்தித்துள்ளார். இது புதுவை காங்கிரஸ் கட்சிக்கும், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும்.

எனவே, இவரது இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாகவும் அல்லது ஏமாற்றமாகவும் இல்லை. ஜான்குமாரின் பலமும் பலவீனமும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே தெரியும். இவர் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில், முன்வைத்துள்ள கோரிக்கைகள், இன்றும் பரிசீலனையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. தனது முடிவை ஜான்குமார் மறுபரிசீலனை செய்வது நல்லது” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தனவேலு கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்டார். அவரின் எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டது. ஆனால், ஜான்குமார் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்களின் மென்மையான போக்கினைத் தொண்டர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.