ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
பூஜா கேட்கர் புனேவில் உதவி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். கலெக்டரின் அதிகாரத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மோசடி செய்துதான் ஐஏஎஸ் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகின. ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கு முன் அவர் தன்னுடைய பெயரை மாற்றி கூறியிருந்ததாகவும் தன்னுடைய பெற்றோர் பெயரையும் மாற்றி கூறியிருந்ததாகவும் அதுமட்டுமின்றி தனது தந்தையின் வருமானத்தையும் குறைத்து கூறியிருந்ததாகவும் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சலுகை பெற்றதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருந்தது. அவரை விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டபோது அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பதை கண்டுபிடித்து அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.