பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

Filed under: அரசியல் |

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி ரத்து செய்தார். இத்தீர்ப்பை பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. இது அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு “ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது,” என்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. “இந்த விவகாரத்தில் நாங்கள் முடிவெடுக்கும் வரை, தேர்தலை நடத்த வேண்டாம். இதை பின்னர் விசாரிப்போம்,” என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, “அதுவரை தேர்தல் நடத்தப்படாது” என்று உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. வழக்கை, நவம்பர் 21ம் தேதிக்கு மேல் விசாரிக்கப்போவதாகக் கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.