தொழிலதிபர் ஒருவர் போலி சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் பணத்தை இழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது.
காவல்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல போலியாக நடித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் ஆங்காங்கே அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் வாத்வா. இவர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது. போலி அடையாள அட்டைகளை காட்டிய அந்த நபர்கள் வீடு முழுவதும் சோதனை செய்ய தொடங்கியுள்ளனர். பின்னர் அங்கு கிடைத்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை எடுத்துக் கொண்ட அவர்கள், சிபிஐ அலுவலகம் வந்து உரிய ஆவணங்களை காட்டி அவற்றை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளனர். அவரும் சிபிஐ அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயன்றபோதுதான் வந்தவர்கள் பலே கொள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.