மதிமுகவுக்கு வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் உடையாமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மதிமுகவும், திமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு திமுக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மதிமுகவின் நிர்வாக குழு கூட்டத்தில் பேசியபின் வைகோ செய்தியாளர்களிடம், “மதிமுகவின் முதன்மை செயலர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு நானோ துரை வைகோவோ பதில் கூறவில்லை. தேர்தல் ஆயத்த பணிகளை தற்போது செய்துவிட்டு அதன் பிறகு தேர்தல் நேரத்தில் போட்டியிடுவது யார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்” என்று கூறினார். இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.