சென்னை வானிலை ஆய்வு மையம் வருகிற 29ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 29.04.2024 முதல் 01.05.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை: 25.04.2024 முதல் 29.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.