நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவிகள் துப்புரவு பணியில் ஈடுபட்டதை உதாரணமாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தினமும் மாணவிகள் 4 பேர் வகுப்பறைகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பரவியது. இச்செயலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி பள்ளி சிறு உதாரணம்தான். எனவே, பணியாளர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



