தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வைகோவின் வாரிசு அரசியலால் மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் எம்பி கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுக்காததால், அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பேசப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், “ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். வைகோவின் குடும்ப ஆசை, வாரிசு ஆசையால் நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக எம்.பியை படுகொலை செய்திருக்கிறார். கலைஞர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது திமுகவிலிருந்து வைகோ வெளியேறினார். தற்போது அவரது மகனுக்கு தேர்தலில் சீட் வழங்கி, அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம், எம்பி கணேசமூர்த்தி மரணத்திற்கு வைகோவும், ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம், திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கிற அங்கீகாரம், சாதாரண தொண்டர்களுக்கு கிடைக்கிறதா? திமுகவில் ஜனநாயகம் வரட்டும், வாரிசு அரசியல் ஒழியட்டும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.