மதுரை மாணவனுக்கு நீதி கிடைத்தது!

Filed under: அரசியல் |

லட்சத்தீவில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை மாணவனுக்கு எம்.பி. மேற்கொண்ட முயற்சியால் தேர்வு மையம் மதுரைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நீதி கிடைத்ததாக குறிப்பிட்டு தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மதுரையை சேர்ந்த மாணவன் லோகேஷ்வருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்துள்ளது. தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது. மாணவனின் தந்தை எம்.பி.வெங்கடேசனை நாடியுள்ளார். இதையடுத்து சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவன் லோகேஷ்வருக்கு லட்சத்தீவிலிருந்து சொந்த ஊரான மதுரையிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மட்டும் இந்த விவகாரத்தில் சற்று கவனக் குறைவாகவோ மெத்தனமாகவோ இருந்திருந்தால் பரிதாபமாக நுழைவுத் தேர்வே எழுத முடியாத நிலை மாணவர் லோகேஷ்வருக்கு ஏற்பட்டிருக்கும். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி. நீதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளதுடன், தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.