மத்திய அரசை கண்டித்து டில்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி வழங்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் மற்றும் பெருவெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனை தேசிய பேரிடராக அறிவித்து சுமார் 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக எம்.பி.க்களும் வலியுறுத்தினர். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து தற்போதுவரை நிதி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி திமுக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றனர். இதனிடையே, மாநில அரசின் நிதி பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்து டில்லியில் கேரள அரசு சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. க்கள் பங்கேற்றனர்.