கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிபடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக தகவல் வெளியானது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். சிறுத்தையை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சிறுத்தை தென்படுவதாக கூறிய பகுதிகளில் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் ஒரு வாரமாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து விரைவில் சிறுத்தையை பிடித்து மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.