மாஞ்சோலை விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் முடிவு!

Filed under: தமிழகம் |

டில்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த 1929-ம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் இந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.