நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் நாம் குறிப்பிட்டபடி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதைக் குறித்து பாராட்டுகள் குவிகிறது. உண்மையில் நரேந்திரமோடிக்கு அலை என்ற மாயை பா.ஜ.க.வில் பெரிதாக விளம்பரப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேற்கு மாநிலங்கள் பா.ஜ.க.வின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. ஆனால் டெல்லியில் ஒருங்கிணைந்த மக்கள் இந்தியக் கட்சிகளை மிரள வைத்துள்ளார்கள். ஊழல், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத்திண்டாட்டம் போன்ற காரணங்கள் இந்திய மக்களின் அறிவுத்திறனை திறந்து விட்டுள்ளது. இதன் எதிர்பார்ப்பு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற கணிப்பு உள்ளது.
இந்திய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் சுயநலத்தன்மை, ஊழல் போன்றவை மக்களவைத் தேர்தலின் போது இந்திய மக்களால் கருத்தில் கொள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் சிறப்பான நிர்வாகத்திறமையை முழுமையாக பயன்படுத்த தடுத்த பா.ஜ.க. சுயநல அரசியல்வாதிகளைக் குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். பா.ஜ.க.வை குழப்பத்தில் ஆழ்த்தி அத்வானியை உசுப்பேற்றிய சுயநலத்தலைவர்கள் தற்போது அடங்கி உள்ளார்கள்.
இவர்களுடைய மறுபிரவேசத்திற்கு குஜராத் முதல்வரின் ஆதரவு அதிக அவசியம் என்பதால், கப்சிப்பாகி கிடக்கிறார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது. காங்கிரசில் ராகுல்காந்தியின் எழுச்சி அவரது அடிவருடிகளாலேயே அமுக்கப்பட்டுவிட்டதாம். மூத்த தலைவர்களை அலட்சியப்படுத்தியதன் விளைவு, தொகுதிகளை கைப்பற்ற கிடைக்கும் அறிவுரைகள் கிட்டாமல் போய்விட்டன. நவீன கணினிகளை நம்பி மோசம் போன இளைஞர் பட்டாளம், மூத்த அரசியல்வாதிகளின் அறிவுத்திறனை பயன்படுத்தத் தவறிவிட்டார்களாம்.
ஆகமொத்தம் இந்திய மக்களின் அறிவுக்கண்கள் திறந்துவிட்ட நிலையில் இந்திய கட்சிகள் அதிர ஆரம்பித்து விட்டார்களாம். இது எப்படி இருக்கு? உண்மையில் அடுத்த பிரதமரை முடிவு செய்யப்போகிறவர்கள் தென் இந்திய மக்களும், கிழக்கிந்திய மக்களும்தான் என்ற கணிப்பு உள்ளது. சுமார் 240 பாராளுமன்றத் தொகுதிகளில் இரு தேசிய கட்சிகளும் வலுவாக இல்லை என்பது சுட்டெரிக்கும் உண்மை.
இதில் கேரளா மாநிலம் காங்கிரசுக்கு பலத்த தோல்வியைத் தரலாம் என்ற கணிப்பு உள்ளது. காரணம் காங்கிரஸ் ஆதரவு தரும் முஸ்லீம் லீக் கட்சி தனியாக நிற்கப்போவதாக அறிவித்து உள்ளதாம். ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கர்நாடகாவில் மறுபடி பா.ஜ.க. எழுச்சி பெற வாய்ப்புகள் உள்ளன. இதற்கு பா.ஜ.க.வை விட்டு பிரிந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா மறுபடி இணைவதை சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் பெரும் ஆதரவாளர்களான லிங்காயத் இனத்தவரும், கௌடா இனத்தவரும் தற்போதைய காங்கிரஸ் முதல்வருக்கு எதிராக திரும்பி உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின்றன.
அடுத்தது மேற்கு வங்கம் மம்தா பானர்ஜிக்கு அதிக வெற்றியை கொடுக்கும். ஒரிசாவின் நவீன் பட்நாயக் இன்றைய சூழ்நிலையில் முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். பீகாரின் நிதிஷ்குமார் தற்போது ஆப்பு அடிக்கப்பட்டு குழம்பி உள்ளாராம். காரணம் லாலுவும், ராம்விலாஸ் பாஸ்வானும் காங்கிரசுடன் இணைந்து உள்ளார்கள். நிதிஷ்குமார் பா.ஜ.க.வை கைவிட்டவுடன் தனிமரம் ஆகிவிட்டார். தற்போது மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க தவிக்கத் தொடங்கிவிட்டாராம்.
இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் எதிர்பார்ப்புடன் தற்போது தமிழகம் உள்ளதாம். காரணம் தமிழக கட்சிகளின் குழப்பமான நிலை என்கிறார்கள். மோடியை வைத்து கடைவிரித்த பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுக்காக ஏங்குகின்றதாம். தன்னுடைய அரசியல் கட்சியின் நிலை தெரியாத கேப்டன், வீண் பிடிவாதம் செய்வதாக அக்கட்சித் தொண்டர்கள் குமுறுகிறார்களாம். பாவம் தி.மு.க. தன்னுடைய தலைவரின் குடும்ப விரிசலில் சிக்கி தவிப்பதாக தலைநகரில் கிசுகிசுக்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் பரிதாபகரமான நிலையில் தமிழகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எந்த தமிழகக் கட்சியும் காங்கிரசுடன் இணையத்தயங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. ஏற்காடு இடைத்தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றி முழுக்க முழுக்க முதல்வரையே சாரும். மற்றபடி கட்சியினர் மத்தியில் கடும் உழைப்பு தென்படவில்லை. உதாரணத்திற்கு கும்பகோணம் நகராட்சியில் 1000 குடும்பங்களைக் கொண்ட தெருக்களுக்கு நியமித்த வார்டு செயலாளர் சுமார் 700 வாக்குகளை அ.தி.மு.க.விற்கு பெற்று கொடுத்ததாகவும், அதே 1800 வாக்காளர்கள் கொண்ட பல்லவபுர நகராட்சியைச் சேர்ந்த வட்டச் செயலாளர், வட்ட பிரதிநிதி, வட்டத்தலைவர் வெறும் 300 வாக்குகளை பெற்றுத் தந்ததாகவும் கூறப்படுகிறதாம். காரணம் கட்சிக்கு உழைக்கின்ற மனப்பான்மை பல கட்சித் தொண்டர்களுக்கு இன்னமும் வளரவில்லை. அதற்கு புரட்சித்தலைவியின் உடனடி கவனம் தேவை என்கிறார்கள்.