நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமாகி வருகிறார்.
தனிப்பட்ட முறையில் இதுவரையில் பல மக்களுக்கு உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் உட்பட இணைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை மூலம், தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து தரப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக விவாசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர் 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அறக்கட்டளை துவக்க விழாவில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா கலந்துகொள்ள, இவர்களுடன் ராகவா லாரன்ஸின் தாய் கண்மணி அம்மாவும் கலந்து கொண்டார்.
விழாவில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், “பத்திரிக்கை ஊடக நண்பர்கள், நான் வளர்த்த குழந்தைகள், என் தாய், எஸ்.ஜே.சூர்யா என் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். 2 மாதம் முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கோவிலுக்கு போய் வந்த நாள், ஒரு கனவு அதை நினைத்து கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அது தான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான் அதைச் செய்யப்போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் அதைச் செய்யப் போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன். இன்று மாற்றம் துவங்குவது மிகுந்த மகிழ்ச்சி. செஃப் வினோத் மாற்றம் மூலம் என்ன செய்யப்போகிறீர்கள் என்றார், மக்களைத் தேடிப்போய் குறைகள் கேட்டு வரப்போகிறேன் என்றேன். நீங்கள் போகும் போது சொல்லுங்கள் அதற்கான சாப்பாட்டை நான் கவனித்து கொள்கிறேன். என்றார் அவருக்கு கடவுள் மனது. அறந்தாங்கி நிஷா உங்களால் முடிந்த சின்ன அளவில், பல உதவிகளை செய்து வருகிறீர்கள் மகிழ்ச்சி. இணைந்து பணியாற்றுவோம் என்றார். என் சமீபத்திய நண்பர் எஸ்.ஜே.சூர்யா, போனில் தொடர்பு கொண்டு எங்கு பார்த்தாலும் மாற்றம் என்று பார்க்கிறேன் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். நான் மாற்றம் பற்றி சொன்னேன், உடனே நானும் மாற்றத்தில் இணைகிறேன் என்றார். அவர் இதைச் சொல்வார் என நினைக்கவில்லை. சினிமாவில் மட்டுமல்ல மாற்றத்திலும் என்னுடன் இணைந்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம். என்னை இந்தளவு வளர்த்தெடுத்தது என் தாய் தான். சின்ன வயதில் என் அம்மா, என்னை எம்.ஜி.ஆர் மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவு இல்லையென்றாலும் அவரில் சிறியளவிலாவது நான் செயல்படுவேன். நாளை என் அம்மாவின் பிறந்த நாள், நாளை முதல் இந்த மாற்றம் துவங்கும் நன்றி” என்று கூறினார்.
எஸ் ஜே சூர்யா பேசும்போது, “மாஸ்டரை பொறுத்தவரை ஒரு தாயின் வளர்ப்பில் பல போராட்டங்களை தாண்டி தான், இந்தளவு வளர்ந்து வந்திருக்கிறார். இத்தனை தடைகளை தாண்டி வளர்ந்து, வந்த பிறகு, எல்லோருக்கும் உதவனும் எனும் எண்ணம் வருவது மிகப்பெரியது. சிலருக்கு சரி நாமும் உதவனும் என எண்ணம் வரும். ஆனால் அதை எத்தனை நாளைக்கு செய்ய முடியும், ஆனால் இவர் 25 வருடங்களாக செய்து வருகிறார். ஊனமுற்ற குழந்தைகள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை அன்பு என்று கேட்டேன், அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சொன்னார், அவர் அம்மா செய்த ஒரு நிகழ்வைப் பற்றி சொன்னார். அதைக்கேட்டபோது தான் புரிந்தது. அவர் ஒரு லெஜெண்ட். ஒரு படம் முடிந்தால் பெரிதாக அந்த நடிகர்களோடு உறவு இருக்காது, பார்க்கும் போது பேசிக்கொள்வோம் அவ்வளவு தான், ஆனால் இவருடன் இணைந்து பயணிக்கிறேன் என்றால் அவரின் அன்பு தான் காரணம். அவரின் சொந்த முயற்சியில் சொந்தப் பணத்தில் தான் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். உதவி செய்ய வருபவர்களை கூட பணம் வாங்காமல் நீங்களே இவர்களுக்கு செய்யுங்கள் என கை காட்டுகிறார். இது எத்தனை பாரட்டுக்குரிய விசயம். அவர் வளர்த்த குழந்தைகள் இன்று வளர்ந்து பலருக்கு உதவி செய்கிறார்கள். அவர் என்னை பல கோவில்களுக்கு அழைத்து செல்வார். என்னுள்ளேயே பல மாற்றங்களை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த மாற்றத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் என்றேன் ரொம்ப சந்தோசப்பட்டார். முடியாதவர்கள் பலரின் வாழ்க்கைக்கு, பலருக்கு பல உதவிகளை செய்வதில் நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். முதல் கட்டமாக 10 லட்சம் அளிக்கிறேன். நீங்கள் செய்யுங்கள் என்றேன் ஆனால் நீங்களே உங்கள் கையால் செய்யுங்கள் என்றார்” என்று கூறினார்.