ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தையொட்டி, விநியோகஸ்தர்கள் கிளப்பிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் மாதம் வெளியான ‘லிங்கா’. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு பல விநியோகஸ்தர்கள் பெருமளவில் நஷ்டம் அடைந்ததாக பிரச்சினை கிளம்பியது.
இதைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில், உண்ணாவிரதப் போராட்டம், பத்திரிக்கையாளர் சந்திப்பு என பிரச்சினை நீள, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் லிங்கா குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்துள்ளதாகவும், அது தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 10 நாட்களாக இந்தத் தொகையை பிரித்துக் கொள்வதில் குழப்பம் நிலவுவதாலேயே பணத்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் என்றும், இதற்கும் ரஜினிகாந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.